Srilasri Venkataraama Siddha Maharaaj, ki jai. Eternal Master of ADOPT Nature.

“திருமலை-திருவேங்கடம்- குருவேங்கடராமன்

Home » Temples » “திருமலை-திருவேங்கடம்- குருவேங்கடராமன்

நாரதர் ஒரு நாள் வேங்கடவனிடம் கேட்டார்.

“அசுரர்கள் செய்த பாபத்தைவிட இப்போது பூலோக மக்கள் பன்மடங்கு அதிகம் பாபத்தைச் செய்கிறார்கள். இதைத் தடுக்க தாங்கள் முயற்சி செய்யக்கூடாதா?”

“நாரதருக்கு திடீரென்று இப்படி ஓர் எண்ணம் எப்படி வந்தது?”

“தங்கள் கருணையை தினமும் பார்க்கிறேன். யார் வந்து தஞ்சம் அடைந்தாலும் அவர்கள் செய்த பாபத்திற்கு மன்னிப்பு தந்து அவர்களுடைய பாப மூட்டைகளைத் தாங்கள் சுமக்கிறீர்கள். இதைத் தவிர்க்கத்தான் கேட்டேன் ஸ்வாமி!”

“நாரதா! நீ ஒன்றை அறவே மறந்துவிட்டாய். கலிபுருஷன் செய்கிற லீலைதான் இது. அது வேகமாகத்தான் வேலை செய்யும். எனவே பாபத்தைச் செய்யாமல் யாரும் பூலோகத்தில் இருக்க முடியாது.”

“கலிபுருஷனை அடக்கிவிட்டால் பாபம் செய்வதை பூலோக மக்கள் விட்டுவிடுவார்கள் அல்லவா?”

“நல்லயோசனை. ஆனால் இது கலியுகம் ஆயிற்றே! அவன் கை ஓங்க வேண்டும். இல்லையென்றால் பிரளயம் எப்படி ஏற்படும்?”

“பிரளயமா?”

“ஆமாம். கலிபுருஷனின் ஆட்டம் அதிகமாக அதிகமாள ஜனங்கள் தர்மத்தை அறவே மறந்து விடுவார்கள். அக்கிரமங்கள் அதிகமாகும். பாபங்கள் அதிகமாகும். மகளிர் கற்பு நெறி தவறுவார்கள். விலைவாசி உயரும். கொலை பாதகங்கள் நடக்கும். ஒவ்வொரு குடும்பத்திலும் சோதனைகள் அதிகமாகும். நோய்கள் பேயாட்டம் போடும். பூமியில் நீர் வற்றும். இயற்கை தன் கடமையைச் செய்யாது.”

“தாங்கள் இதையெல்லாம் திருமலையில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே இருப்பீர்களாக்கும்?”

“நாரதா! நான் இன்னும் கலியுகத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்று சொல்லும் முன்னரே பதற்றப்படுகிறாயே! சரி சரி. மேற்கொண்டு சொன்னால் நீ தாங்கமாட்டாய். ஆனால் ஒன்று. இத்தனை சோதனைகளையும் தாண்டி என்னிடம் முழுமனத்தோடு சரண் புகுந்தவர்களுக்கு மட்டும் நான் அடைக்கலம் தருவேன். எல்லாருக்கும் அல்ல.”

“தன்யனானேன் பிரபு! அப்படி அடைக்கலம் கேட்டு வருகிறவர்கள் அன்றாடம் திருமலையில் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாருக்கும் பாபத்தைப் போக்கி புண்ணியம் தருகிறீர்கள் அல்லவா?”

“ஆமாம்! அதிலென்ன சந்தேகம்? நீதான் தினமும் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாயே”

“அதனால்தான் கேட்கிறேன். அவர்களுடைய பாப மூட்டைகளை எப்படி தாங்கள் கரையச் செய்து புண்ணியத்தை அள்ளித் தருகிறீர்கள்?”

“இது தெய்விக ரகசியம் தான். இந்த மலைக்கு வேங்கட மலை என்றுதான் பெயர்.”

“ஆமாம்“

“அதாவது பாபத்தைப் போக்கும் இடம். அப்படித்தானே?”

“ஆமாம்”

“இந்த வேங்கடமலைக்கு படியேறி வந்து என்னைப் பிரார்த்தனை செய்து வரும் பக்தர்களின் உண்மையான பக்தியை நான் காலிகோபுரத்தில் அமர்ந்தபடியே பார்க்கிறேன். என் பார்வை அவர்கள் மீது படும். அப்பொழுது அவர்கள் செய்த பாபம் காற்றிலே கரையும். மலையின் அடியில் மறையும். காலிகோபுரத்தைத் தாண்டி பயபக்தியோடு வருபவர்கள் பெரும்பாலோருக்கு ஆதிசேஷனும் கருடாழ்வாரும் மேலும் கொஞ்சம் பாபத்தை மலையின் இருபக்கம் நின்று போக்கிவிடுவார்கள்.”

“ஆச்சரியமாக இருக்கிறதே!”

“ஆதிசேஷனும் கருடனும் தினமும் தங்கள் பணியை இன்றைக்கு மாத்திரமல்ல பிரளயம் ஏற்படும் வரை என்றைக்கும் செய்வார்கள். இது அவர்களுக்குக் கஷ்டமான செயல் அல்ல. இரட்டிப்பு மகிழ்ச்சியோடு செய்கிறார்கள்.”

“அப்படியெனில் தங்களின் பொற்பாதத்தைத் தேடி மலையில் நடந்து வரும் பக்தர்களுக்கு இவ்வளவு பெரும் புண்ணியம் கிடைக்கிறது என்று இப்போதுதான் தங்களின் திருவருளால் கேட்கும் பாக்யம் பெற்றேன். மேற்கொண்டு தாங்கள் திருவாய் மலர்ந்து சொல்லுங்கள் ஸ்வாமி!”

“ஆதிசேஷனும் கருடாழ்வாரும் போக்கிய பாபத்தையும் தாண்டி இன்னும் பாபம் இருந்தால் புஷ்கரணியில் நீராடும்போது அந்தப் பாபத்தின் பெரும்பகுதி கழிந்து விடுகிறது. அப்படியே மிச்சம் மீதி பாபங்கள் இருந்தால் என் கோபுர கலசத்தை தரிசனம் செய்யும் பொழுது விலகிவிடும். போதுமா?” என்று சொல்லி கன்னங் குழியச் சிரித்தார் வேங்கடவன்.

நாரதர் அப்படியே வேங்கடவன் திருப்பாதத்தில் விழுந்து வணங்கினார்.

“திருமலையில் எப்படியெல்லாம் புண்ணியம் கிடைக்கும் என்பதை மிகவும் அற்புதமாகச் சொல்விஇவிட்டீர்கள். இப்படி வந்து தங்கள் திருவடியைத் தரிசனம் செய்தும் நிறைய மனிதர்களுக்கு பாபம் போகாமல் இருக்கிறதே, இதற்கு என்ன காரணம்?”

“வேங்கடமலைக்கு வந்தாலே அவன் இதுவரை செய்த அத்தனை தோஷங்களும் விலகும். அதனால்தான் வேங்கடாத்திரி என்று இந்த மலைக்குப் பெயர். இங்கு வந்தும் கூட ஒருவனுடைய பாபம் விலகவில்லையென்றால் அவன் உண்மையான பக்தியோடு வேங்கடமலைக்கு வரவில்லை என்று அர்த்தம்.”

“அப்படியானால் அப்பேர்ப்பட்டவர்களுக்கு கடைசிவரை சாபவிமோசனம் கிடையாதா?”

“கண்டிப்பாக அவர்களுக்கும் சாபவிமோசனம் உண்டு.

ஆனால் அவர்கள் பயபக்தியோடு இங்கு வந்து மூன்று நாள்கள் தங்கியிருந்து தினமும் காலையில் அங்கப்பிரதக்ஷணம் செய்து மாலையில் மூன்று முறை வேங்கடமலையை அதாவது குடியிருக்கும் கோவிலை வலம் வரவேண்டும். உடலை வருத்தி பிரார்த்தனை செய்யவேண்டும். உள்ளத்தில் ஆழ்ந்த பக்தியும் இருக்கவேண்டும்.”

“சரி. இதை எப்படி தாங்கள் அறிவீர்கள் ஸ்வாமி?”

“அதற்குத்தான் பரிவாரத் தேவதைகள் இங்கு இருக்கிறார்கள். வராஹமூர்த்தி இருக்கிறார். சித்தர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாரும் தலையாய சித்தர் அகஸ்தியர் தலைமையில் அன்றாடம் அரூபமாக இயங்கி வருகிறார்கள். இவர்கள் இருக்கும் பொழுது எனக்கு எந்தவிதக் குறையும் இல்லை.”

“ஸ்வாமி! இப்படிப்பட்ட ஒரு கேள்வியை தங்கள் முன்பு சமர்ப்பிக்கிறேன் என்று அருள் கூர்ந்து கோபித்துக் கொள்ளக்கூடாது. கேட்கலாம் என்றால் கேட்கிறேன்.” என்று நாரதர் கை கூப்பி வாய் பொத்தி பணிவுடன் திருமாலை நோக்கிக் கேட்டார்.

“சொல்லுங்கள் நாரதரே!”

“தங்களை இங்கு வந்து நேரிடையாக வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மட்டும்தான் பாபவிமோசனம் கிட்டுமா? இங்கு வர முடியாதவர்கள் எப்படி தங்கள் பாபத்தைப் போக்கிக் கொள்வார்கள்?”

“நாரதா! என்னை நோக்கி வருபவர்களை விட என்னை நோக்கி வராதவர்கள்தான் மிக அதிகம். அவர்களை நான் எப்படி கைவிட்டு விடமுடியும்? ஒருகாலும் விடமாட்டேன். அவர்கள் ஏழைகளாக இருக்கலாம். நடக்க முடியாமல் அவதிப்படலாம். அல்லது அவர்களின் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் பல்வேறு தடைகள் இருக்கலாம். இதையெல்லாம் அறிந்து அவர்களின் பக்திக்கேற்ப நான் அவர்களுக்கு மோட்சத்தையும் முக்தியையும் கொடுப்பேன்.”

“வேங்கடவா! தங்களின் கருணையே கருணை. தாங்கள் திருமலையில் இருக்கும் வரை பூலோக மக்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.

திருவேங்கட மலையின் வேறு சிறப்புகள் ஏதேனும் உண்டா? என்று வேங்கடமலைக்கு வந்த திலிப சக்கரவர்த்தி என்னும் ஆன்மிக மன்னர் அங்கு தவம் செய்து கொண்டிருந்த துர்வாச முனிவரை நோக்கிக் கேட்டார்.

“ஒன்றா? இராண்டா? எத்தனையோ சொல்லலாம். நாராயணாத்திரி மலையோடு ஏழுமலை கதை முடியவில்லை.

இன்னும் ஒரு கதையும் வேங்கடமலையில் உண்டு. அதைச் சொல்லும் முன்பு நிறையப் பேருக்குத் தெரியாத செய்திகள் இந்த மலையில் உண்டு.

கோனேரித் தீர்த்தம் ஒன்றுதான் முதலில் இருந்தது. இப்பொழுது இந்த மலையில் வேங்கடவனே நித்திய தரிசனம் செய்வதால் இந்த மலையும் புண்ணிய மலையாயிற்று.

கலிபுருஷன் வேங்கடவனிடம் சண்டையிட்டுத் தோற்றுப் போனான். இதற்குப் பிறகு புண்ணிய தீர்த்தங்கள் பல உருவாயின.

சுருக்கமாகச் சொல்லப் போனால் இங்கு 66 வகையான கோடி தீர்த்தங்கள் உண்டு. அந்த தீர்த்தங்களில் 1008 மிகவும் சிறந்தது. இதனையும் கூறு போட்டுப் பார்த்தால் 216 தீர்த்தங்கள் மிகவும் முக்கியமானவை. இந்த 216 தீர்த்தங்களில், 108 தீர்த்தங்களில் நீராடினால் அல்லது அவற்றின் தீர்த்தங்களை தலையில் இரண்டு சொட்டாவது விட்டுக் கொண்டால் போதும். ஏழேழு ஜன்மத்தில் செய்த பாபங்கள் விலகும்.” என்றார் துர்வாசர்.

“அந்த 108 தீர்த்தங்களை தாங்கள் அடையாளம் காட்ட முடியுமா?” என்று திலிப சக்கரவர்த்தி கேட்டார்.

துர்வாசர் ஒரு நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்து சொல்லலானார்.

“வேங்கடவன் தரிசனம் தரும் அந்தக் கோவிலுக்குத் தென் கிழக்குத் திசையில் சக்கரதீர்த்தம், அதற்குப் பக்கத்தில் வஜ்ர தீர்த்தம் உண்டு. இவை அத்தனை புண்ணியமானவை.
வஜ்ர தீர்த்ததிற்குப் பக்கத்தில் விசுவசேன தீர்த்தம், மேற்கே பஞ்சாயுத தீர்த்தம், இதற்கு அருகில் அலாயுத தீர்த்தம், நரசிம்ம தீர்த்தம் உண்டு.

சற்றே தள்ளி மேற்கே வந்தால் காசிப தீர்த்தம், அக்னி தீர்த்தம், மன்மத தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், கௌதம தீர்த்தம், விசுவாமித்திர தீர்த்தம், பார்கவ தீர்த்தம், சைபவ தீர்த்தம், தேவ தீர்த்தம், அஷ்டகோண மஹரிஷி தீர்த்தம் உண்டு.

இந்த தீர்த்தங்கள் ரிஷிகளால் உண்டாக்கப்பட்டு வேங்கடவனின் நித்ய பூஜைக்காக காத்துக் கிடக்கின்றன என்று சொன்ன துர்வாசர் இதற்கு

வடகிழக்குத் திசையில் வைரவ தீர்த்தம், சேஷதீர்த்தம், க்ஷேத்ரபாலகர் தீர்த்தம் என்ற ஒப்புயர்வு மிக்க புண்ணிய தீர்த்தங்களையும் தாண்டி

மேற்குத் திசைக்கு வந்தால்-
அங்கு- பாண்ட தீர்த்தம், மாருத தீர்த்தம், அஸ்தி தீர்த்தம், மார்கண்ட தீர்த்தம், வாலகில்லிய தீர்த்தம், சாவாவி தீர்த்தம், சுரதா தீர்த்தம், விஷுகர தீர்த்தம் என்ற தீர்த்தங்களும் உண்டு.

இங்கு ஸ்நானம் செய்தால் அத்தனை தோஷங்களும் மறையும்.

இதனையும் தாண்டி வடகிழக்குத் திசைக்கு வந்தால் லக்ஷ்மி தீர்த்தம் உண்டு. இதன் வடதிசைக்கு வந்தால் இஷ்ட தீர்த்தம், சுகிக்ஷண தீர்த்தம், சிருங்க தீர்த்தம், சபாதீர்த்தம் என்னும் அருமையான தீர்த்தங்களும் உண்டு.

கோவிலின் வடமேற்கில் சதுர்முக தீர்த்தம், இந்திர தீர்த்தம், பாரதி வாஜ தீர்த்தம், ஆகாச கங்கை தீர்த்தம், பராசர தீர்த்தம், குமார தாரிதை, விபாண்டவ தீர்த்தம், தும்புரு தீர்த்தம், ஜகதீர்த்தம் என்னும் சின்னச்சிறு தீர்த்தங்களும் உண்டு.

இந்தத் தீர்த்தங்களைப் போல தசாவதார தீர்த்தம், சப்தரிஷி தீர்த்தம், சேனாபதி தீர்த்தம், உண்டு.

இதனையும் தாண்டி கொஞ்சம் நகர்ந்தால் தசனேன தீர்த்தம், உத்தமசரசு தீர்த்தம், மனு தீர்த்தம், நிர்மல தீர்த்தம், ருத்ர தீர்த்தம், வசு தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், மருத்துவ தீர்த்தம், சானவி தீர்த்தம், வாருண தீர்த்தம், கவணவ தீர்த்தம், சுகதீர்த்தம், நாபேய தீர்த்தம், பராசி பத்ர தீர்த்தம், பௌமாச தீர்த்தம் போன்றவையும் காணப்படும்.

இந்தத் தீர்த்தங்களில் உடலை சுத்தப்படுத்திக் கொண்டு, ஆசுவாசப் படுத்திக் கொண்டு சிறிது தூரம் நடந்தால், சோம தீர்த்தம், நாரத தீர்த்தம், யம தீர்த்தம், அக்னி தீர்த்தம், பசு தீர்த்தம், யக்ஷ தீர்த்தம், கணேஷ்வர தீர்த்தம், ஜகஜாட்யஹா தீர்த்தம், விஸ்வ கல்லோல தீர்த்தம், பிரகஸ்பதி தீர்த்தம், ரோமரிஷி தீர்த்தம், சேனேஸ்வர தீர்த்தம், அஜரனமிள தீர்த்தம், கருமதீர்த்தம், அஸ்வ தீர்த்தம், மந்தரை தீர்த்தம், சுப்பிரமண்ய தீர்த்தம், வாருணி தீர்த்தம், வயினதேய தீர்த்தம், ரணவிமோசன தீர்த்தம் என்று பல அற்புதமான மூலிகை குணம் மிக்க தீர்த்தங்களும் உண்டு.

இந்த தீர்த்தக் கரையில் நின்று அந்தத் தீர்த்தங்களை முகர்ந்தாலே போதும். ஏழேழு ஜன்மத்திற்கும் பாபம் அண்டாது.” என்று விளக்கம் அளித்தார் துர்வாசர்.

பாக்கியுள்ள தீர்த்தங்களையும் சொல்லிவிடுகிறேன்” என்று தொடர்ந்தார்:

“அகமருஷண தீர்த்தம், அனந்த தீர்த்தம், பர்ஜன்ய தீர்த்தம், மேக தீர்த்தம், நாராயண தீர்த்தம், கால தீர்த்தம், கோமுக தீர்த்தம், அதிகுத்த தீர்த்தம், வாசுதேவ தீர்த்தம் ஆஞ்சனேய தீர்த்தம், அங்கருஷண தீர்த்தம், சுதாகசரசு தீர்த்தம், பிதுரி தீர்த்தம், இதிகாச தீர்த்தம், புராண தீர்த்தம், பிரத்யும்ன தீர்த்தம், சுத்தத் தீர்த்தம், கபிண தீர்த்தம் என்ற தீர்த்தங்கள் காலாகாலத்திற்கும் அழியா வண்ணம் இந்த வேங்கட மலையில் உண்டு.” என்று வேகமாகச் சொல்லி முடித்தார் துர்வாசர்.

கை கூப்பி ஆனந்தமாக இதையெல்லாம் கேட்டுக்கொண்ட திலிப மன்னர் “இத்தனை தீர்த்தங்களில் நீராடுவதற்கு உடனடியாக இயலாதே. இதற்கு ஏதுவாக வேறு மார்க்கம் இருக்கிறதா?” என்று பவ்வியமாகக் கேட்டார் திலிப மன்னர்.

“இப்படியொரு கேள்வியை நீ கேட்பாய் என்று எனக்குத் தெரியும். என்னைவிடத் தலைசிறந்த தலையாய சித்தனான அகஸ்தியர் அதோ அங்கு தியானம் செய்து கொண்டிருக்கிறார். அவர் தியானம் செய்து முடித்ததும் அவரிடம் சென்று கேள். தக்க பதிலை அகஸ்தியரே விளக்குவார்.” என்று திலிப சக்ரவர்த்திக்கு அகஸ்தியரை அடையாளம் காட்டிவிட்டு வேங்கடவனை நோக்கித் தியானத்தில் ஆழ்ந்தார் துர்வாசர்.

வேங்கடவனை நோக்கித் தியானத்தில் ஆழ்ந்திருந்த அகத்தியர் முன்பு பவ்வியமாக கையைக் கட்டிக் கொண்டு அமர்ந்தார் திலிப சக்ரவர்த்தி.

ஒரு நாள் அல்ல ஏழு நாள்கள் ஆயிற்று. அகஸ்தியர் தியானம் செய்து முடிக்க. அது வரை திலிப சக்கரவர்த்தியும் தண்ணீர் கூடப் பருகாமல், அகத்தியரைப் போல் தியானத்தில் ஆழ்ந்தார்.

ஏழாம் நாள் காலையில் அகஸ்தியர் கண் விழித்தபோது தன் எதிரில் கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்து கொண்டிருக்கும் திலிபன் சக்ரவர்த்தியைக் கண்டார்.

ஆன்மிகத்தையும் தர்மத்தையும் கொண்டு பரிபாலனம் செய்யும் இந்த மன்னன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு தன்னை நோக்கிக் காத்திருக்கும் காரணத்தைத் தன் ஞானக்கண்ணால் அறிந்தார்.

தானே எழுந்து திலிப சக்ரவர்த்தியைத் தட்டி எழுப்பினார். கண் திறந்து பார்த்த திலிபன், தன் எதிரே அகஸ்தியரே நிற்பதைக் கண்டு பரம சந்தோஷப்பட்டு. “தன்யனானேன்” என்று அகஸ்தியர் பாதத்தில் விழுந்து நமஸ்கரித்தார்.

“திலிபா! உனக்கு மங்களம் உண்டாகட்டும். துர்வாசர் உன்னை இங்கு அனுப்பி வைத்திருக்கிறார். நீ எதைக் கேட்க வந்தாயோ அதற்குரிய பதிலைச் சொல்கிறேன் கேள்.”

“இங்குள்ள கோடி தீர்த்தங்களில் 108 புண்ணிய தீர்த்தங்கள் எல்லாம் ஒவ்வோர் ஆண்டும் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் வேங்கடவன் அருகிலுள்ள புஷ்கரணியில் ஒன்றாகக் கலங்கும் அந்த நாளில் யார் இங்கு வந்து இந்த புஷ்கரணியில் நீராடுகிறார்களோ அவர்களுக்கு 108 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய புண்ணியம் கிடைக்கும்” என்று பதில் உரைத்தார் அகஸ்தியர்.

இதைக்கேட்டு புளகாங்கிதம் ஆனான் திலிப சக்கரவர்த்தி.

இன்றைக்கும் கூட புஷ்கரணியின் கீழிருந்து திருமலை வேங்கடவன் அருளால் நூற்றியெட்டு புண்ணிய தீர்த்தங்கள் புஷ்கரணிக்கு ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையும் வந்து கொண்டிருக்கிறது.

: நாராயணப் பெரியவர் கொண்டுவந்த மூட்டையிலிருந்து சாளக்கிராமம் கீழே விழுந்ததும் விழுந்த இடத்தில் சுனை தோன்றியதும் அந்தச் சுனைக்குள் சாளக்கிராமம் இருப்பதையும் கண்டு வியந்து போன ‘அகத்தி’ என்ற அகத்தியருக்கு ஆச்சரியம்.

இப்படிப்பட்ட அதிசயம் நடக்குமா? என்று வியந்து போன அகத்தியர், நாராயணப் பெரியவரை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டார்.

“பெரியவர் யாரென்று இந்த அடியேன் தெரிந்து கொள்ளலாமா?”

“நீ யாரென்று சொன்னால் என்னைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.”

“ஐயாவைப் பார்க்கும்பொழுது வைணவத்திற்காக எதையும் இழப்பவர் வேங்கடவன் மேல் பற்று கொண்டவர் என்று உயர்ந்த எண்ணம் ஏற்பட்டது. “கோவிந்தா கோவிந்தா” என்று தாங்கள் ஒவ்வொரு வினாடியும் நாமத்தைச் சொல்லி வந்தீர்கள். வேங்கடவ தாசனான தங்களுக்கு  கைம்மாறு செய்ய வேண்டி மாற்று உருவம் எடுத்து தங்களுக்கு உதவிசெய்ய வந்தேன். அடியேனுக்கு அகத்தியன் என்று பெயர்” என்றார் அகத்தி என்ற அகத்தியர்.

“அகத்தியர் போன்ற சித்த புருஷர்களைச் சந்திக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அகத்தியர் இன்னும் இளமை வேஷம் போடவேண்டாமே! நிஜ உருவத்திலேயே எனக்குக் காட்சியைத் தந்தால் பாக்கியவான் ஆவேன்.” என்றார் நாராயணப் பெரியவர்.

“சந்தோஷமாக” என்று சொன்ன அகத்தியர் அடுத்த வினாடி அகத்தியராக மாறி இயல்பான நிலைக்கு வந்தார்.

நாராயணப் பெரியவர் தன் இரு கைகளையும் கூப்பி சாஷ்டாங்கமாக அகத்தியர் காலில் விழுந்தார். அவரை கைதாங்கிப் பிடித்துக் கொண்ட அகத்தியர் “இது வேங்கடவன் சந்நிதி. ஆதிசேஷனின் தலையில் வேங்கடவன் அமர்ந்திருக்கும் புண்ணிய ஸ்தலம். இங்கே என் காலில் விழக்கூடாது. வேங்கடவன் காலில் விழ வேண்டும்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

“அகத்தியரே! தங்களை இந்தத் திருமலையில் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி. நான் வேங்கடவனைப் பற்றி கிரந்தத்தில் நிறைய ஓலைச் சுவடிகளில் எழுதி வைத்திருக்கிறேன். அவற்றைத் தங்களிடம் ஒப்படைக்கிறேன். இதைத் தாங்கள் தமிழில் மொழி பெயர்த்து எல்லாரும் அறிய வெளிக் கொணரவேண்டும். செய்வீர்களா?” என்று கேட்டார் நாராயணப் பெரியவர்.

“இது வேங்கடவனே அடியேனுக்கு இட்ட கட்டளையாக எண்ணுகிறேன். வேங்கடவனின் எண்ணம் அதுபோல் இருக்குமேயானால் இந்தத் திருமலையில் தாங்கள் எழுதிய கிரந்தத்தை மொழிபெயர்ப்பு செய்து, புரட்டாசி மாதம் சனிக்கிழமையன்று அதை அரங்கேற்றமும் செய்துவிடுகிறேன். போதுமா?” என்றார் அகத்தியர்.

“தன்யனானேன்” என்ற நாராயணப் பெரியவரிடம் அகத்தியர் “பெரியவரே! எனக்கொரு சந்தேகம். தாங்கள் யார்? எதற்காக கஷ்டப்பட்டு மலையேறி வரவேண்டும்? அதுவும் சாளக்கிராமத்தையும் ஓலைச் சுவடிகளையும் தலையில் சுமந்து?” என்று லேசாக நிறுத்தினார்.

“ம்ம் வேறு என்ன சந்தேகம் அகத்தியரே! எதுவும் கேட்க வேண்டியதுதானே?”

“சாளக்கிராமம் ஏன் வெளியே வந்து விழுந்தது? விழுந்த இடத்தில் எப்படி சுனை உண்டாயிற்று? சாளக்கிராமம் அந்தச் சுனைக்குள் இருப்பதன் காரணம் என்ன? இதையெல்லாம் தாங்கள் கூறவேண்டும் என்று ஆசை” என்றார் அகத்தியர்.

“நாராயணப் பெரியவர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு இப்படி இந்த மரநிழலில் ஆற அமர உட்கார்ந்து பேசலாமா?” என்றார்.

“தாராளமாக” என்று அகத்தியர் சொல்ல, இருவரும் அந்த சுனை தோன்றிய பள்ளத்தின் அருகிலுள்ள நாவல் மரத்தடியில் அமர்ந்தார்கள்.

“என் பெயர் நாராயணன். வைணவக் குடும்பத்தைச் சேர்ந்தவன். இளம் வயதிலே வேதம், கிரந்தம் போன்றவற்றைக் கற்றேன். எட்டு வயதில் வீட்டை விட்டுப் புறபட்டேன். இப்பொழுது வயது எண்பத்தெட்டு ஆகிறது. கடந்த எண்பது ஆண்டுகளாக இந்த பாரத தேசம் முழுவதும் கோவில் கோவிலாகச் சுற்றினேன். அறுபது வயதில் நான் நேபாளத்துக்குச் சென்று கண்டகி நதியோரம் ஆஸ்ரமம் போல் ஒன்றை அமைத்துக் கொண்டு விஷ்ணுவைத் தியானம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு நாள் என் மடியில் இந்த சாளக்கிராமம் வந்து விழுந்தது.”
தானாக எப்படி சாளக்கிராமம் வந்து விழுகிறது என்று எண்ணி ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த பொழுது ஓர் அசரீரிக் குரல் கேட்டது.

“நாராயணா! நீ இங்கேயே இருந்து இருபத்தைந்து ஆண்டு காலம் இந்த சாளக்கிராமத்தை வைத்து பூஜை செய். உன் எண்பத்தைந்தாவது வயதில் இங்கிருந்து நடைப்பயணமாக திருமலைக்குப் புறப்பட்டுச் செல். அப்போது இந்த சாளக்கிராமமும் உன்னுடன் இருக்கட்டும். திருமலையில் ஓர் அதிசயம் நடக்கும். எந்த இடத்தில் இந்த சாளக்கிராமம் உருண்டு கீழே விழுகிறதோ அந்த இடத்தில் ஒரு சுனை தோன்றும்.

சாளக்கிராமமும் அதனுள் இருக்கும். அந்த இடத்தில் அமர்ந்து வேங்கடவனை நோக்கித் தவம் செய். வேங்கடவனே உனக்கு நேரில் தரிசனம் தருவார். நீ பிறந்ததன் பயனை அடைவாய்.”
என்று சொன்ன அசரீரியின் வாக்கை தெய்வ வாக்காக எண்ணினேன்.

அதன்படி இருபத்தைந்து ஆண்டு காலம் விஷ்ணுவை நோக்கித் தவம் புரிந்தேன். என் எண்பத்தைந்தாவது வயதில் நேபாளத்திலிருந்து புறப்பட்டேன். மூன்றாண்டுகள் நடைப்பயணமாகப் பயணம் செய்து இன்றைக்கு வேங்கடவன் மலையில் படியேறிக் கொண்டிருக்கிறேன்.” என்று அகத்தியரிடம் தன் வாழ்க்கையில் நடந்த கதையைச் சொன்னார் நாராயணப் பெரியவர்.

எட்டு வயதிலிருந்து எண்பத்தெட்டு வயது வரை சதாசர்வ காலமும் நாராயணனையே பிரார்த்தனை செய்து இந்தியாவின் பல புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வந்த இவர் உண்மையிலேயே புண்ணியசாலிதான்.

வேங்கடவனின் பரிபூர்ண கருணை இவருக்கு நன்றாகவே கிட்டியிருக்கிறது என்று எண்ணிக் கொண்ட அகத்தியர், நாராயணப் பெரியவரை ஆற அமர அமர்ந்த அவருக்கு வேண்டிய சௌகரியங்களைச் செய்துவிட்டு பின்பு நேராக வேங்கடவனின் சந்நிதிக்குச் சென்றார்.

நாராயணப் பெரியவரைப் பற்றிச் சொன்னதும் “அகத்தியரே! அந்த சாளக்கிராமத்தில் இருப்பதும் நான்தான். இன்றல்ல நேற்றல்ல; நாராயணன் ஏழு ஜன்மமாகவே என் மீது அளவற்ற பக்தி கொண்டவன். இன்னும் சொல்லப்போனால் ஒரு நெருங்கிய நண்பரைப் போலவே நான் இந்த நாராயணனிடம் பழகி வந்திருக்கிறேன். கடைசி காலத்தில் தமக்கு என் காலடியில் அடைக்கலம் பெற வேண்டி இப்போது இந்த மலைக்கு வந்திருக்கிறான்.” என்றார் வேங்கடவன்.

“அவ்வளவு பக்திமானா இந்த நாராயணர்?”

“ஆமாம். வேண்டுமென்றால் இப்போதே அவருக்கு ஒரு சோதனை வைக்கிறேன் இம்மியளவும் கூட என் நிலையிலிருந்து மாறமாட்டார் என்பதை நீயே பாரேன்” என்றார் வேங்கடவன்.

“தாங்களே அமுதவாய் திறந்து நாராயணரைப் பற்றிச் சொல்லும்போது எதற்கு ஐயனே அவரைச் சோதிக்க வேண்டும்?”

“இல்லை அகத்தியரே! இவரது பக்தி எல்லையைக் கடந்தது. அதனால்தான் இவரது கடைசி காலத்தில் நாராயணனை இங்கு வரவழைத்தேன். பாரேன் வேடிக்கையை” என்ற பெருமாள் ஒரு நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு மௌனம் சாதித்தார்.

கீழே…
எந்த இடத்தில் நாராயணப் பெரியவர் அமர்ந்திருந்தாரோ அந்த இடத்தில் திடீரென்று தீ பிடித்தது. பட்சிகள் எல்லாம் அலறி அடித்துக்கொண்டு மரங்களை விட்டுப் பறந்தன. காட்டிலுள்ள மிருகங்கள் பயந்து நடுநடுங்கி அபயக் குரல் எழுப்பின. பசுமையாக இருந்த காடு எப்படி தீ பிடித்தது என்று அங்கிருந்த முனிவர்கள் வியப்புடனும் பீதியுடனும் பேசிக்கொண்டனர்.

ஆனால்…
இவரைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் “கோவிந்தா கோவிந்தா” என்று கண்ணை மூடிக்கொண்டு வேங்கடவனையே ஜபம் செய்து கொண்டிருந்தார் நாராயணப் பெரியவர்.

அவரைச் சுற்றி வட்டவடிவமாக அக்னி எரிந்து கொண்டிருந்தது.

இத்தகைய சூழ்நிலையில் நாராயணப் பெரியவரின் தியானம் கொஞ்சம் கூடக் கலையவே இல்லை.

மற்றவர்களாக இருந்தால் இந்நேரம் தலைதெறிக்க ஓடிப்போயிருப்பார்கள்.
வேங்கடவன், இந்தக் காட்சியை அகத்தியருக்குக் காட்டி “இவருடைய ஆழ்ந்த பக்தியைப் பற்றி என்ன நினைக்கிறாய் அகத்தியரே!” என்றார்

“அற்புதமானது. ஆனந்தமானது. எளிதில் வரையறுத்துச் சொல்லமுடியாதது” என்றார்.

“அப்படியெனில் இவரது பக்திக்கு நாம் என்ன கைமாறு செய்யலாம்?” என்று வேங்கடவன் அகத்தியரிடம் ஆலோசனை கேட்டார்.

“ஐயனே! இதில் நானென்ன சொல்வதற்கு இருக்கிறது? தாங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதன்படியே செய்யலாமே” என்றார் அகத்தியர் பவ்வியமாக.

“அது தெரியாமல்தானே நானே குழம்பிக் கொண்டிருக்கிறேன்” என்ற வேங்கடவன் “இனி நாராயணனைச் சோதனை செய்தது போதும். அக்னி தேவன் விலகிக் கொள்ளட்டும்” என்றார்.
அடுத்த விநாடி அக்னி தேவன் மறைய நாராயணப் பெரியவர் இருந்த இடம் மறுபடியும் பசுமைச் சோலையாக மாறிவிட்டது. காண்பது கனவா? நனவா? என்று திருமலையிலுள்ள முனிபுங்கவர்கள் வியப்பின் எல்லைக்குச் சென்றுவிட பட்சிகளும், மிருகங்களும் உற்சாகமாக அந்தக் காட்டில் வலம் வரத்தொடங்கின.

“ஒன்று செய்வோம். நாமிருவரும் நேரடியாகவே நாராயணனிடம் போவோம். அவருடைய விருப்பத்தைக் கேட்போம். அவர் என்ன விரும்புகிறாரோ அதையே செய்வோம்.” என்றார் அகத்தியர்.

வேங்கடவன் அதற்குச் சம்மதம் தெரிவிக்க அகத்தியரும் வேங்கடவனும் நேராக திருமலையில் ஜபம் செய்யும் நாராயணப் பெரியவரிடம் வந்தனர்.

“நாராயணா” என்றழைத்தார் வேங்கடவன்.
பெருமாளின் திவ்வியமான, மங்களகரமான தேனமுதக் குரலைக் கேட்டு நாராயணப் பெரியவர் கண் திறந்தார்.

எதிரே வேங்கடவன் தரிசனத்தைக் கண்டதும் சாஷ்டாங்கமாக பொற்பாதத்தில் விழுந்தார். அவர் கண்ணில் ஆனந்தம் கரைபுரண்டோடியது.

“என்மீது இடைவிடாது பக்தி கொண்டு பிரார்த்தனை செய்து வரும் உனக்கு என்ன வேண்டும்?”

“வேங்கடவா! தங்கள் தரிசனம் ஒன்றே போதுமானது. வேறொன்றும் வேண்டாம் ஐயனே!”

“நீ என்னைப் பற்றி கிரந்தத்தில் நிறைய எழுதியிருக்கிறாயாமே”

“ஆமாம்.”

“அதை அகத்தியன் பொறுப்பேற்று தமிழில் மொழி பெயர்த்து விடுவான். கவலைப்படாதே! வேறு என்ன வேண்டும்?”

“உன் திருவடியில் நான் சரணாகதி ஆகிவிட்டேன். உன் திருவடித் தாமரைப் பாதங்களைக் கண் கொட்டாமல் காலம் காலமாக கண்டு கொண்டே இருக்க வேண்டும்.”

“பிறகு?”

“வேறொன்றும் வேண்டாம் ஐயனே!”

“நீ கேட்டதை நான் கொடுத்துவிட்டேன். அகத்தியர் அதற்குச் சாட்சி. இப்போது நான் கொடுப்பதை நீ வாங்கிக் கொள்.” என்றார் வேங்கடவன்.

நாராயணர் பதில் எதுவும் சொல்லாமல் மிரள மிரள விழித்தார்.

“இந்த இடம் இனிமேல் உன் பெயரால் ‘நாராயண கிரி’ என்று வழங்கப்படும். என் மீது அளவற்ற பக்தி கொண்ட உன் போன்ற பக்தர்களுக்கு வேங்கடவன் அளிக்கும் அன்புப் பரிசு இது” என்று சொல்லி ஆசிர்வாதம் வழங்கினார்.

இன்றைக்கு “நாராயணாத்திரி” என்று சொல்லப்படும் மலையில்தான் நாராயணப் பெரியவர் அருரூபமாக நடமாடிக் கொண்டிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

வேங்கடம் என்ற சொல்லைப் பிரித்து பதம் பார்க்க வேண்டும். வேம் என்றால் பாபம் என்று பொருள். கடம் என்றால் போக்குதல் என்று அர்த்தம். ஒவ்வொருவரும் தெரிந்தோ அல்லது தெரியாமலோ நிறையப் பாபங்களை அன்றாடம் செய்யவேண்டியிருக்கிறது.
பிற்காலத்தில் இந்தப் பாபங்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது அவை நோயாக மாறுகின்றன. அல்லது விபத்து போன்ற சம்பவங்கள் நடந்து மனத்தை வேதனை அடைய வைக்கின்றன. இந்தப் பாபத்தைப் போக்க நதிகளில் நீராடினாலும் அந்த பாபங்கள் போவதில்லை. பகவான் பாதத்தில் விழுந்து சரணாகதி அடைந்தால்தான் அந்தப் பாபங்களிலிருந்து கடைத்தேறலாம்.

வேங்கடராமன் ➡ பாவங்களை போக்கும் ராமன்

453 total views, 1 views today

Leave a Reply

Or

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Birth Star – Temple Details

lotusThe Correct temples pertaining to your Birth star with contact details – Please visit frequently & Energize yourself.

Mudra Treatment – Reach Health

prayerMudras – The Silent Solution in your Hands

Praise Divine – Move On

Yoga-Silhouette1Mental & Physical Well Being. Learn more and start practicing

Find Count Now Done- Make Money

loveAll Joint Families , Folks, Tribes have always won and succeeded finally by being together.

Srilasri Venkataraman Siddha Maharaj Ki Jai